குறள் 545:

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.

Where king, who righteous laws regards, the sceptre wields, There fall the showers, there rich abundance crowns the fields
அதிகாரம் - 55 - செங்கோன்மை
மு.வரதராசன் விளக்கம்
நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது,பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
பெயலும் விளையுளும் தொக்கு - பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு கூடி, இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட - நூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டின் கண்ணவாம். ('உளி' என்பது மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச்சொல், வானும் நிலனும் சேரத் தொழிற்பட்டு வளம் சுரக்கும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.