குறள் 542:
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
All earth looks up to heav'n whence raindrops fall; All subjects look to king that ruleth all
அதிகாரம் - 55 - செங்கோன்மை
மு.வரதராசன் விளக்கம்
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.
பரிமேலழகர் விளக்கம்
உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகா நிற்குமே எனினும், குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும். (நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய உணவை 'வான்' என்றும், கோலின் ஆய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.