குறள் 535:

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.

To him who nought foresees, recks not of anything, The after woe shall sure repentance bring
அதிகாரம் - 54 - பொச்சாவாமை
மு.வரதராசன் விளக்கம்
வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன்,துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்.
பரிமேலழகர் விளக்கம்
முன்னுறக் காவாது இழுக்கியான் - தன்னால் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் ஊறு தன்பிழை இரங்கிவிடும் - பின்வந்துற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின் அப்பிழைப்பினை நினைத்து இரங்கிவிடும். (காக்கப்படும் துன்பங்களாவன: சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. 'ஊற்றின்கண்' என்புழி உருவும் சாரியையும் உடன் தொக்கன. உற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின், இரங்கிவிடும் என்றார். இவை மூன்று பாட்டானும் பொச்சாப்பு உடையார்க்கு வரும் ஏதம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்.