குறள் 533:
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school
அதிகாரம் - 54 - பொச்சாவாமை
மு.வரதராசன் விளக்கம்
மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.
பரிமேலழகர் விளக்கம்
பொச்சாப்பார்க்குப் புகழ்மை இல்லை - பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை, அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு - அவ்வின்மை இந்நீதி நூலுடையார்க்கேயன்றி உலகத்து எவ்வகைப்பட்ட நூல் உடையார்க்கும் ஒப்ப முடிந்தது. (அரசர்க்கேயன்றி அறம் முதலியன நான்கினும் முயல்வார் யாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழில்லை என்பது தோன்ற, 'எப்பால் நூலோர்க்கும் துணிவு' என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.