குறள் 531:

இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soul Bring self-forgetfulness than if transcendent wrath control
அதிகாரம் - 54 - பொச்சாவாமை
மு.வரதராசன் விளக்கம்
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது.
பரிமேலழகர் விளக்கம்
சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு - மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி, இறந்த வெகுளியின் தீது - அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது. (மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு, பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. இறந்த வெகுளி: ஒரோவழிப் பகைவரையும் கொல்லும், இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீதாயிற்று)
சாலமன் பாப்பையா விளக்கம்
மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.