குறள் 529:
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.
Who once were his, and then forsook him, as before Will come around, when cause of disagreement is no more
அதிகாரம் - 53 - சுற்றந்தழால்
மு.வரதராசன் விளக்கம்
முன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
தமர் ஆகித் தன் துறந்தார் சுற்றம் - முன் தமராய்வைத்துத் தன்னோடு அமராது யாதானும் ஒரு காரணத்தால் தன்னைப் பிரிந்து போயவர் பின்னும் வந்து சுற்றமாதல், அமராமைக் காரணம் தன் மாட்டு இல்லையாகத் தானே உளதாம். ('அமராமைக் காரணம் இன்றி' என்றதனான் முன் அஃது உண்டாய்த் துறத்தல் பெற்றாம்'. அஃதாவது, அரசன் தான் நெறிகெட ஒழுகல், வெறுப்பன செய்தல் என்றிவை முதலியவற்றான் வருவது. 'ஆக்கம்' வருவிக்கப்பட்டது. இயற்கையாகவே அன்புடையராய சுற்றத்தார்க்குச் செய்கையான் வந்த நீக்கம் அதனையொழிய ஒழியும், ஒழிந்தால் அவர்க்கு அன்பு செய்துகொள்ளவேண்டா, பழைய இயல்பாய் நிற்கும் என்பார் 'வரும்' என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
முன்பு தன் அரசியல் இயக்கத்தில் இருந்து, ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை காரணமாகப் பிரிந்து போனவர்கள், ஆட்சியாளனிடம் அந்தக் குற்றம் இல்லாது போனதைக் கண்டு அவர்களாகவே திரும்ப வருவர்.