குறள் 527:
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
The crows conceal not, call their friends to come, then eat; Increase of good such worthy ones shall meet
அதிகாரம் - 53 - சுற்றந்தழால்
மு.வரதராசன் விளக்கம்
காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு
பரிமேலழகர் விளக்கம்
காக்கை கரவா கரைந்து உண்ணும் - காக்கைகள் தமக்கு இரையாயின கண்டவழி மறையாது இனத்தை அழைத்து அதனோடும் கூட உண்ணாநிற்கும், ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள - சுற்றத்தான் எய்தும் ஆக்கங்களும் அப்பெற்றித்தாய இயல்பினை உடையார்க்கே உளவாவன. அவ்வாக்கங்களாவன: பகையின்மையும், பெருஞ்செல்வம்உடைமையும் முதலாயின, எச்ச உம்மையான் அறமும் இன்பமுமேஅன்றிப் பொருளும் எய்தும் என்பது பெறுதும். 'அப்பெற்றித்தாயஇயல்பு' என்றது தாம் நுகர்வன எல்லாம் அவரும்நுகருமாறு வைத்தல்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்.