குறள் 508:
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
Who trusts an untried stranger, brings disgrace, Remediless, on all his race
அதிகாரம் - 51 - தெரிந்துதெளிதல்
மு.வரதராசன் விளக்கம்
மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து,அமர்த்திக்கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்.
பரிமேலழகர் விளக்கம்
பிறனைத் தேரான் தெளிந்தான் - தன்னோடு இயைபுடையன் அல்லாதானைப் பிறப்பு முதலியவற்றானும் செயலானும் ஆராய்ந்து தெளிந்த அரசனுக்கு, வழிமுறை தீரா இடும்பை தரும் - அத்தெளிவு தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். (இயைபு: தன் குடியோடு தொடர்ந்த மரபு. இதனானே அதுவும் வேண்டும் என்பது பெற்றாம். தெளிதல் அவன்கண்ணே வினையை வைத்தல். அவ்வினை கெடுதலால், தன் குலத்துப் பிறந்தாரும் பகைவர் கைப்பட்டுக்கீழாய்விடுவர் என்பதாம். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.