குறள் 506:
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
Beware of trusting men who have no kith of kin; No bonds restrain such men, no shame deters from sin
அதிகாரம் - 51 - தெரிந்துதெளிதல்
மு.வரதராசன் விளக்கம்
சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
அற்றாரைத் தேறுதல் ஓம்புக - சுற்றம் இல்லாரைத் தெளிதலை ஒழிக, அவர் மற்றுப் பற்று இலர் - அவர் உலகத்தோடு தொடர்பு இலர், பழி நாணார் - ஆகலான் பழிக்கு அஞ்சார். ('பற்று இலர்' என்பதனால் 'சுற்றம்' என்பது வருவிக்கப்பட்டது. உலகத்தார் பழிப்பன ஒழிதற்கும் புகழ்வன செய்தற்கும் ஏதுவாகிய உலகநடை இயல்பு சுற்றம் இல்லாதார்க்கு இன்மையின், அவர் தெளியப்படார் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்.