குறள் 504:
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
Weigh well the good of each, his failings closely scan, As these or those prevail, so estimate the man
அதிகாரம் - 51 - தெரிந்துதெளிதல்
மு.வரதராசன் விளக்கம்
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
குணம் நாடி - குணம் குற்றங்களுள் ஒன்றேயுடையார் உலகத்து இன்மையின், ஒருவன் குணங்களை ஆராய்ந்து, குற்றமும் நாடி - ஏனைக் குற்றங்களையும் ஆராய்ந்து, அவற்றுள் மிகை நாடி - பின் அவ்விரு பகுதியுள்ளும் மிக்கவற்றை ஆராய்ந்து, மிக்க கொளல் - அவனை அம்மிக்கவற்றானே அறிக. (மிகையுடையவற்றை 'மிகை' என்றார். அவையாவன: தலைமையானாகப் பன்மையானாக உயர்ந்தன. அவற்றான் அறிதலாவது, குணம் மிக்கதாயின் வினைக்கு உரியன் என்றும், குற்றம் மிக்கதாயின் அல்லன் என்றும் அறிதல். குணமேயுடையார் உலகத்து அரியர் ஆகலின், இவ்வகை யாவரையும் தெளிக என்பது இதனான் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.