குறள் 488:
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
If foes' detested form they see, with patience let them bear; When fateful hour at last they spy,- the head lies there
அதிகாரம் - 49 - காலமறிதல்
மு.வரதராசன் விளக்கம்
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
செறுநரைக் காணின் சுமக்க - தாம் வெல்லக்கருதிய அரசர் பகைவருக்கு இறுதிக் காலம் வருந்துணையும் அவரைக் கண்டால் பணிக, இறுவரை காணின் தலை கிழக்கு ஆம் - பணியவே,அக்காலம் வந்திறும் வழி அவர் தகைவின்றி இறுவர். ('பகைமை ஒழியும் வகை மிகவும் தாழ்க' என்பார், 'சுமக்க' என்றும், அங்ஙனம் தாழவே, அவர் தம்மைக்காத்தல் இகழ்வர் ஆகலின் தப்பாமல் கெடுவர் என்பார், 'அவர் தலை கீழாம்' என்றும் கூறினார். தலைமேற்கொண்டதொரு பொருளைத் தள்ளுங்கால், அது தன் தலைகீழாக விழுமாகலின், அவ்வியல்பு பெறப்பட்டது. இவை இரண்டு பாட்டானும் இருக்கும்வழிப் பகைமை தோன்றாமல் இருக்க என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.