குறள் 482:
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
The bond binds fortune fast is ordered effort made, Strictly observant still of favouring season's aid
அதிகாரம் - 49 - காலமறிதல்
மு.வரதராசன் விளக்கம்
காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.
பரிமேலழகர் விளக்கம்
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் - அரசன் காலத்தோடு பொருந்த வினைசெய்து ஒழுகுதல், திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு - ஒருவர்கண்ணும் நில்லாது நீங்கும் செல்வத்தைத் தன்கண் நீங்காமல் பிணிக்கும் கயிறாம். '(காலத்தோடு பொருந்துதல் - காலம் தப்பாமல் செய்தல். 'தீராமை' என்றதனால், தீர்தல் மாலையது என்பது பெற்றாம். வினை வாய்த்து வருதலான், அதனின் ஆகும் செல்வம் எஞ்ஞான்றும் நீங்காது என்பதாம்.)'
சாலமன் பாப்பையா விளக்கம்
காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.