குறள் 48:
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
Others it sets upon their way, itself from virtue ne'er declines; Than stern ascetics' pains such life domestic brighter shines
அதிகாரம் - 5 - இல்வாழ்க்கை
மு.வரதராசன் விளக்கம்
மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை - தவஞ்செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப் பண்ணித் தானும் தன் அறத்தின் தவறாத இல்வாழ்க்கை; நோற்பாரின் நோன்மை உடைத்து - அத் தவஞ்செய்வார் நிலையினும் பொறையுடைத்து. (பசி முதலிய இடையூறு நீக்கலின் 'ஆற்றின் ஒழுக்கி' என்றார். 'நோற்பார்' என்பது ஆகுபெயர்.நோற்பார் நிலைக்கு அவர்தம்மை உற்ற நோயல்லது இல்வாழ்வார் நிலைபோல் பிறரை உற்ற நோயும் பொறுத்தல் இன்மையின், 'நோற்பாரின் நோன்மையுடைத்து' என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது.