குறள் 479:
அளவறந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
Who prosperous lives and of enjoyment knows no bound, His seeming wealth, departing, nowhere shall be found
அதிகாரம் - 48 - வலியறிதல்
மு.வரதராசன் விளக்கம்
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல்திட்டங்களை வகுத்துக்கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பது போல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்
பரிமேலழகர் விளக்கம்
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை - தனக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப வாழமாட்டா தான் வாழ்க்கைகள் : உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் - உள்ளன போலத் தோன்றி, மெய்ம்மையின் இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமும் இன்றிக் கெட்டுவிடும். (அவ்வெல்லைக்கு ஏற்ப வாழ்தலாவது: அதனின் சுருக்கக்கூடாதாயின் ஒப்பவாயினும் ஈத்தும் துய்த்தும் வாழ்தல்.தொடக்கத்தில் கேடு வெளிப்படாமையின், 'உளபோலத் தோன்றி'என்றார். முதலிற் செலவு மிக்கால் வரும் ஏதம் கூறியவாறு.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.