குறள் 473:
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
Ill-deeming of their proper powers, have many monarchs striven, And midmost of unequal conflict fallen asunder riven
அதிகாரம் - 48 - வலியறிதல்
மு.வரதராசன் விளக்கம்
தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.
பரிமேலழகர் விளக்கம்
உடைத்தம் வலி அறியார் - கருத்தா ஆதலையுடைய தம் வலியின் அளவறியாதே, ஊக்கத்தின் ஊக்கி - மனஎழுச்சியால் தம்மின் வலியாரோடு வினை செய்தலைத் தொடங்கி, இடைக்கண் முரிந்தார் பலர் - அவர் அடர்த்தலான் அது செய்து முடிக்கப் பெறாது இடையே கெட்ட அரசர் உலகத்துப் பலர். ('உடைய' என்பது அவாய் நின்றமையின் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. மூவகை ஆற்றலுள்ளும் சிறப்புடைய அறிவு உடையார் சிலராதலின், 'முரிந்தார் பலர்' என்றார். அதனால் தம் வலியறிந்தே தொடங்குக என்பது எஞ்சி நின்றது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.