குறள் 469:

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

Though well the work be done, yet one mistake is made, To habitudes of various men when no regard is paid
அதிகாரம் - 47 - தெரிந்துசெயல்வகை
மு.வரதராசன் விளக்கம்
அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.
பரிமேலழகர் விளக்கம்
நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு - வேற்று வேந்தர்மாட்டு நன்றான உபாயம் செய்தற்கண்ணும் குற்றம் உண்டாம், அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை - அவரவர் குணங்களை ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு இயையச் செய்யாவிடின். (நன்றான உபாயமாவது: கொடுத்தலும் இன்சொல் சொல்லுதலுமாம். அவை யாவர் கண்ணும் இனியவாதல் சிறப்புடைமையாயின், உம்மை சிறப்பு உம்மை. அவற்றை அவரவர் பண்பு அறிந்து ஆற்றாமையாவது, அவற்றிற்கு உரியர் அல்லாதார்கண்ணே செய்தல். தவறு, அவ்வினை முடியாமை.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.