குறள் 466:

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

'Tis ruin if man do an unbefitting thing; Fit things to leave undone will equal ruin bring
அதிகாரம் - 47 - தெரிந்துசெயல்வகை
மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.
பரிமேலழகர் விளக்கம்
செய்தக்க அல்ல செயக் கெடும் - அரசன் தன்வினைகளுள் செய்யத்தக்கன அல்லவற்றைச் செய்தால் கெடும், செய்தக்க செய்யாமையானும் கெடும் - இனி அதனானே அன்றிச் செய்யத்தக்கனவற்றைக் செய்யாமை தன்னானும் கெடும். (செய்யத்தக்கன அல்லாவாவன : பெரிய முயற்சியினவும், செய்தால் பயனில்லனவும், அது சிறிதாயினவும் ஐயமாயினவும், பின் துயர்விளைப்பனவும் என இவை. செய்யத்தக்கனவாவன: அவற்றின் மறுதலையாயின. இச்செய்தல் செய்யாமைகளான் அறிவு, ஆண்மை, பெருமை,என்னும் மூவகை ஆற்றலுள் பொருள், படை என இரு வகைத்தாகிய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாம் ஆகலான், இரண்டும் கேட்டிற்கு ஏதுவாயின. இதனான் 'செய்வன செய்து, ஒழிவன ஒழிக' என இருவகையனவும் உடன் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா விளக்கம்
செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.