குறள் 454:
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.
Man's wisdom seems the offspring of his mind; 'Tis outcome of companionship we find
அதிகாரம் - 46 - சிற்றினஞ்சேராமை
மு.வரதராசன் விளக்கம்
ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.
பரிமேலழகர் விளக்கம்
அறிவு - அவ் விசேட உணர்வு, ஒருவற்கு மனத்து உளது போலக் காட்டி - ஒருவற்கு மனத்தின் கண்ணே உளதாவது போலத் தன்னைப் புலப்படுத்தி , இனத்து உளதாகும் - அவன் சேர்ந்த இனத்தின்கண்ணே உளதாம் . (மெய்ம்மை நோக்காமுன் மனத்துளது போன்று காட்டியும் , பின் நோக்கிய வழிப்பயின்ற இனத்துளதாயும் இருத்தலின் 'காட்டி' என இறந்த காலத்தால் கூறினார். 'விசேட உணர்வுதானும்' மனத்தின்கண்ணே அன்றேயுளதாவது'? என்பாரை நோக்கி ஆண்டு் புலப்படும் துணையே உள்ளது: அதற்கு மூலம் இனம் என்பது இதனான் கூறப்பட்டது.
சாலமன் பாப்பையா விளக்கம்
அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.