குறள் 45:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
If love and virtue in the household reign, This is of life the perfect grace and gain
அதிகாரம் - 5 - இல்வாழ்க்கை
மு.வரதராசன் விளக்கம்
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.
பரிமேலழகர் விளக்கம்
இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - ஒருவன் இல்வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தாயின்; அது பண்பும் பயனும் - அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும். (நிரல்நிறை. இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடைபோகாமையின், அன்புடைமை பண்பு ஆயிற்று; அறனுடைமை பயன் ஆயிற்று. இவை மூன்று பாட்டானும் இல்நிலையில் நின்றான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.