குறள் 446:

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.

The king, who knows to live with worthy men allied, Has nought to fear from any foeman's pride
அதிகாரம் - 45 - பெரியாரைத் துணைக்கோடல்
மு.வரதராசன் விளக்கம்
தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.
பரிமேலழகர் விளக்கம்
தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை - தக்காராகிய இனத்தை உடையவனாய்த் தானும் அறிந்து ஒழுக வல்ல அரசனை, செற்றார் செயக் கிடந்தது இல் - பகைவர் செய்யக் கிடந்ததொரு துன்பமும் இல்லை. (தக்கார்: அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையார். ஒழுகுதல்: அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல் வஞ்சித்தல், கூடினவரைப் பிரித்தல், வேறு பகை விளைத்தல் என்ற இவற்றானும், வலியானும் பகைவர் செய்யுந் துன்பங்கள் பலதிறத்த ஆயினும், தானும் அறிந்து, அறிவார் சொல்லும் கொண்டொழுகுவான்கண் அவற்றுள் ஒன்றும் வாராது என்பார், 'செற்றார் செயக்கிடந்தது இல்' என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.