குறள் 438:
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.
The greed of soul that avarice men call, When faults are summed, is worst of all
அதிகாரம் - 44 - குற்றங்கடிதல்
மு.வரதராசன் விளக்கம்
பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான்.
பரிமேலழகர் விளக்கம்
பற்றுள்ளம் என்னும் இவறன்மை -பொருளை விடத்தகும் இடத்து விடாது பற்றுதலைச் செய்யும் உள்ளம் ஆகிய உலோபத்தினது தன்மை, எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று - குற்றத் தன்மைகள் எல்லாவற்றுள்ளும் வைத்து எண்ணப்படுவது ஒன்று அன்று , மிக்கது. (இவறலது தன்மையாவது : குணங்கள் எல்லாம் ஒருங்கு உளவாயினும் அவற்றைக் கீழ்ப்படுத்துத் தான் மேற்படவல்ல இயல்பு ஒழிந்தன அதுமாட்டாமையின், 'எற்றுள்ளும் எண்ணப்படுவதொன்று அன்று' என்றார். 'எவற்றுள்ளும்' என்பது இடைக்குறைந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் உலோபத்தின் தீமை கூறப்பட்டது
சாலமன் பாப்பையா விளக்கம்
செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.