குறள் 433:
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
Though small as millet-seed the fault men deem; As palm tree vast to those who fear disgrace 'twill seem
அதிகாரம் - 44 - குற்றங்கடிதல்
மு.வரதராசன் விளக்கம்
பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
பழி நாணுவார் - பழியை அஞ்சுவார், தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் - தம்கண் தினையின் அளவாம் குற்றம் வந்ததாயினும், அதனை அவ்வளவாக அன்றிப் பனையின் அளவாகக் கொள்வர். (குற்றம் சாதிப்பெயர். தமக்கு ஏலாமையின் சிறிது என்று பொறார், பெரிதாகக் கொண்டு வருந்திப் பின்னும் அதுவாராமல் காப்பர் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.