குறள் 429:
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
The wise with watchful soul who coming ills foresee; From coming evil's dreaded shock are free
அதிகாரம் - 43 - அறிவுடைமை
மு.வரதராசன் விளக்கம்
வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.
பரிமேலழகர் விளக்கம்
திரதாக் காக்கும் அறிவினார்க்கு - வரக்கடவதாகிய அதனை முன் அறிந்து காக்கவல்ல அறிவினை உடையார்க்கு, அதிர வருவது ஓர் நோய் இல்லை - அவர் நடுங்க வருவதொரு துன்பமும் இல்லை. ('நோய்' என வருகின்றமையின், வாளா 'எதிரதா' என்றார். இதனான் காக்கலாம் காலம் உணர்த்தப்பட்டது. காத்தல் - அதன் காரணத்தை விலக்குதல். அவர்க்குத் துன்பம்இன்மை இதனான் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.