குறள் 414:
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
Though learning none hath he, yet let him hear alway: In weakness this shall prove a staff and stay
அதிகாரம் - 42 - கேள்வி
மு.வரதராசன் விளக்கம்
நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால்,அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.
பரிமேலழகர் விளக்கம்
கற்றிலன் ஆயினும் கேட்க - உறுதி நூல்களைத் தான் கற்றிலன் ஆயினும், அவற்றின் பொருள்களைக் கற்றறிந்தார் சொல்லக் கேட்க, அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை - அக்கேள்வி ஒருவனுக்குத் தளர்ச்சி வந்துழிப் பற்றுக் கோடாம் துணை ஆகலான் . ('உம்மை' கற்கவேண்டும் என்பது பட நின்றது. தளர்ச்சி - வறுமையானாதல் அறிவின்மையானாதல் இடுக்கண்பட்டுழி மனம் தளர்தல். அதனைக் கேள்வியினானாய அறிவு நீக்கும் ஆகலின், 'ஊற்றாம் துணை' என்றார். 'ஊன்று' என்னும் ஆகுபெயரின் னகரம் திரிந்து நின்றது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
கல்லாதவனே என்றாலும் கற்றவர் கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு நெருக்கடி வரும்போது பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும்.