குறள் 400:
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
Learning is excellence of wealth that none destroy; To man nought else affords reality of joy
அதிகாரம் - 40 - கல்வி
மு.வரதராசன் விளக்கம்
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை
பரிமேலழகர் விளக்கம்
ஒருவற்குக் கேடு இல் விழுச் செல்வம் கல்வி - ஒருவனுக்கு இழிவு இல்லாத சீரிய செல்வமாவது கல்வி, மற்றையவை மாடு அல்ல - அஃது ஒழிந்த மணியும் பொன்னும் முதலாயின செல்வமல்ல. (அழிவின்மையாவது : தாயத்தார், கள்வர், வலியர், அரசர் என்ற இவரால் கொள்ளப்படாமையும் வழிபட்டார்க்குக் கொடுத்துழிக் குறையாமையும் ஆம். சீர்மை : தக்கார்கண்ணே நிற்றல். மணி , பொன் முதலியவற்றிற்கு இவ்விரண்டும் இன்மையின், அவற்றை 'மாடு அல்ல' என்றார். இவை ஐந்து பாட்டானும் கல்வியது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.