குறள் 398:
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
The man who store of learning gains, In one, through seven worlds, bliss attains
அதிகாரம் - 40 - கல்வி
மு.வரதராசன் விளக்கம்
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவனாது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.
பரிமேலழகர் விளக்கம்
ஒருவற்கு - ஒருவனுக்கு, தான் ஒருமைக்கண் கற்ற கல்வி - தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து - எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து. (வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப் புகும் ஆகலின், 'எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்றார். எழுமை - மேலே கூறப்பட்டது(குறள் 62). உதவுதல் - நன்னெறிக்கண் உய்த்தல்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.