குறள் 395:
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before the wealthy.
அதிகாரம் - 40 - கல்வி
மு.வரதராசன் விளக்கம்
செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக்கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராகக் கருதப்படுவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
உடையார், இல்லார் என்பன உலகவழக்கு. ஏக்கறுதல் ஆசையால் தாழ்தல். கடையர் என்றதனான், அதன் மறுதலைப் பெயர் வருவிக்கப்பட்டது. பொய்யாய மானம் நோக்க மெய்யாய கல்வி இழந்தார் பின் ஒரு ஞான்றும் அறிவுடைய ராகாமையின், 'கடையரே' என்றார். இதனால் கற்றாரது உயர்வும் கல்லாதாரது இழிவும் கூறப்பட்டன.
சாலமன் பாப்பையா விளக்கம்
செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே.