குறள் 391:
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
So learn that you may full and faultless learning gain, Then in obedience meet to lessons learnt remain
அதிகாரம் - 40 - கல்வி
மு.வரதராசன் விளக்கம்
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
கற்பவை கசடு அறக் கற்க - ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க, கற்றபின் அதற்குத் தக நிற்க - அங்ஙனம் கற்றால், அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க. ('கற்பவை' என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிற பொருள் உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக் கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல். நிற்றலாவது: இல்வாழ்வுழிக் 'கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத், தருமமும் தக்கார்க்கே செய்த'லினும் (நாலடி. 250)துறந்துழித் தவத்தான் மெய் உணர்ந்து அவா அறுத்தலினும் வழுவாமை. சிறப்புடை மகற்காயின்கற்றல் வேண்டும் என்பதூஉம், அவனால் கற்கப்படும்நூல்களும், அவற்றைக் கற்குமாறும், கற்றதனால் பயனும்இதனாற் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா விளக்கம்
கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.