குறள் 381:

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings
அதிகாரம் - 39 - இறைமாட்சி
மு.வரதராசன் விளக்கம்
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.
பரிமேலழகர் விளக்கம்
படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் உடையான் - படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன், அரசருள் ஏறு = அரசருள் ஏறு போல்வான். (ஈண்டுக் 'குடி' என்றது, அதனை உடைய நாட்டினை. கூழ் என்றது, அதற்கு ஏதுவாகிய பொருளை. அமைச்சு , நாடு, அரண், பொருள், படை , நட்பு என்பதே முறையாயினும் ஈண்டுச் செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார். 'ஆறும்' உடையான் என்றதனால், அவற்றுள் ஒன்று இல்வழியும் அரசநீதி செல்லாது என்பது பெற்றாம்.வடநூலார் இவற்றிற்கு 'அங்கம்' எனப்பெயர்கொடுத்ததூஉம் அது நோக்கி. 'ஏறு' என்பது உபசார வழக்கு.இதனால் அரசற்கு அங்கமாவன இவை என்பதூஉம், இவைமுற்றும் உடைமையே அவன் வெற்றிற்கு ஏது என்பதூஉம்கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா விளக்கம்
வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.