குறள் 377:
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
Save as the 'sharer' shares to each in due degree, To those who millions store enjoyment scarce can be
அதிகாரம் - 38 - ஊழ்
மு.வரதராசன் விளக்கம்
ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப்பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.
பரிமேலழகர் விளக்கம்
கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும், வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான் அல்லது நுகர்தல் உண்டாகாது. (ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின், வகுத்தான் என்றார். 'இசைத்தலும் உரிய வேறிடத்தான' (தொல்.சொல் 59) என்பதனான் உயர்திணையாயிற்று. படையா தார்க்கேயன்றிப் படைத்தார்க்கும் என்றமையால், உம்மை எச்ச உம்மை. வெறும்முயற்சிகளாற் பொருள்களைப் படைத்தல் அல்லது நுகர்தல் ஆகாது, அதற்கு ஊழ் வேண்டும் என்பதாயிற்று.)
சாலமன் பாப்பையா விளக்கம்
கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.