குறள் 364:

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

Desire's decease as purity men know; That, too, from yearning search for truth will grow
அதிகாரம் - 37 - அவாவறுத்தல்
மு.வரதராசன் விளக்கம்
தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்.
பரிமேலழகர் விளக்கம்
தூஉய்மை என்பது அவா இன்மை - ஒருவர்க்கு வீடு என்று சொல்லப்படுவது அவா இல்லாமை,அது வாஅய்மை வேண்ட வரும் - அவ்வவா இல்லாமைதான் மெய்ம்மையை வேண்டத் தானே உண்டாம். (வீடாவது: உயிர் அவிச்சை முதலிய மாசு நீங்குதல் ஆகலின்,அதனைத் 'தூய்மை' என்றும், காரணத்தைக் காரியமாக உபசரித்து, 'தூய்மை' என்பது அவா இன்மை என்றும் மெய்ம்மையுடைய பரத்தை ஆகுபெயரால் 'மெய்ம்மை' என்றும் கூறினார். 'மற்று' மேலையது போல வினைமாற்றின்கண் வந்தது. வேண்டுதல் - இடைவிடாது பாவித்தல். அவா அறுத்தல், வீட்டிற்குப் பரம்பரையான் அன்றி நேரே ஏது என்பதூஉம் அது வரும் வழியும் இதனால் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்‌.