குறள் 356:
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
Who learn, and here the knowledge of the true obtain, Shall find the path that hither cometh not again
அதிகாரம் - 36 - மெய்யுணர்தல்
மு.வரதராசன் விளக்கம்
கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
துறவற வாழ்வுக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் - இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடைய தேசிகர்பால் கேட்டு அதனான் மெய்ப்பொருளை உணர்ந்தவர், மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர். ('கற்று' என்றதனால் பலர்பக்கலினும் பலகாலும் பயிறலும், 'ஈண்டு' என்றதனால் வீடுபேற்றிற்குரிய மக்கட்பிறப்பினது பெறுதற்கு அருமையும் பெற்றாம். ஈண்டுவாரா நெறி: வீட்டு நெறி. வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று: அவை கேள்வி, விமரிசம், பாவனை என்பன. அவற்றுள் கேள்வி இதனால் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.