குறள் 35:
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
'Tis virtue when, his footsteps sliding not through envy, wrath, Lust, evil speech-these four, man onwards moves in ordered path
அதிகாரம் - 4 - அறன்வலியுறுத்தல்
மு.வரதராசன் விளக்கம்
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.
பரிமேலழகர் விளக்கம்
அழுக்காறு - பிறர் ஆக்கம் பொறாமையும்; அவா - புலன்கள்மேல் செல்கின்ற அவாவும்; வெகுளி - அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்; இன்னாச்சொல்- அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய; நான்கும் இழுக்கா இயன்றது அறம் - இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறம் ஆவது. (இதனான், இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க. இவை இரண்டு பாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.