குறள் 348:

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

Who thoroughly 'renounce' on highest height are set; The rest bewildered, lie entangled in the net
அதிகாரம் - 35 - துறவு
மு.வரதராசன் விளக்கம்
முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள்: அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
தீரத் துறந்தார் தலைப்பட்டார் - முற்றத் துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார், மற்றையவர் மயங்கி வலைப்பட்டார் - அங்ஙனம் துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையுட்பட்டார். (முற்றத் துறத்தலாவது, பொருள்களையும் இருவகை உடம்பினையும் உவர்த்துப் பற்றற விடுதல். அங்ஙனம் துறவாமையாவது, அவற்றுள் யாதானும் ஒன்றின்கண் சிறிதாயினும் பற்றுச் செய்தல். துணிவுபற்றித் தலைப்பட்டார் என்றும், பொய்ந்நெறி கண்டே பிறப்பு வலையுள் அகப்படுதலின், 'மயங்கி' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே.