குறள் 334:
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
As 'day' it vaunts itself; well understood, 'tis knife', That daily cuts away a portion from thy life
அதிகாரம் - 34 - நிலையாமை
மு.வரதராசன் விளக்கம்
வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
நாள் என ஒன்றுபோல் காட்டி ஈரும் வாளது உயிர் - நாள் என்று அறுக்கப்படுவதொருகாலவரையறைபோலத் தன்னைக் காட்டி ஈர்ந்து செல்கின்ற வாளினது வாயது உயிர், உணர்வார்ப் பெறின் - அஃது உணர்வாரைப் பெறின். (காலம் என்னும் அருவப்பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது, தானாகக் கூறுபடாமையின், நாள் என ஒன்றுபோல் என்றும் அது தன்னை வாள் என்று உணரமாட்டாதார் தமக்குப் பொழுது போகாநின்றது என்று இன்புறுமாறு நாளாய் மயக்கலின் 'காட்டி' என்றும் இடைவிடாது ஈர்தலான் 'வாளின் வாயது' என்றும், அஃது ஈர்கின்றமையை உணர்வார் அரியர் ஆகலின் உணர்வார்ப் பெறின் என்றும் கூறினார். உயிர் என்னும் சாதியொருமைப் பெயர் ஈண்டு உடம்பின்மேல் நின்றது. ஈரப்படுவது அதுவேயாகலின். வாள் என்பது ஆகுபெயர். இனி இதனை நாள் என்பதொரு பொருள்போலத் தோன்றி உயிரை ஈர்வதொருவாளாம் என்று உரைப்பாரும் உளர் :'என' என்பது பெயரன்றி இடைச் சொல்லாகலானும், 'ஒன்றுபோல் காட்டி' என்பதற்கு ஒரு பொருள் சிறப்பு இன்மையானும், 'அது' என்பது குற்றியலுகரம் அன்மையானும், அஃது உரையன்மை அறிக.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.