குறள் 324:
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
You ask, What is the good and perfect way? 'Tis path of him who studies nought to slay
அதிகாரம் - 33 - கொல்லாமை
மு.வரதராசன் விளக்கம்
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.
பரிமேலழகர் விளக்கம்
நல் ஆறு எனப்படுவது யாது எனின் - மேற்கதி வீடு பேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்று வினவின், யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி - அஃது யாதோர் உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி. ('யாது ஒன்றும்' என்றது, ஓரறிவுயிரையும் அகப்படுத்தற்கு. காத்தல்: வழுவாமல் காத்தல். இதனான் இவ்வறத்தினை உடையதே நல்நெறி என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.