குறள் 314:
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
To punish wrong, with kindly benefits the doers ply; Thus shame their souls; but pass the ill unheeded by
அதிகாரம் - 32 - இன்னாசெய்யாமை
மு.வரதராசன் விளக்கம்
இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.
பரிமேலழகர் விளக்கம்
இன்னா செய்தாரை ஒறுத்தல் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது: அவர் நாண நல் நயம் செய்துவிடல் - அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல். (மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு . இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.