குறள் 312:
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
Though malice work its worst, planning no ill return, to endure, And work no ill, is fixed decree of men in spirit pure
அதிகாரம் - 32 - இன்னாசெய்யாமை
மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்.
பரிமேலழகர் விளக்கம்
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் - தம்மேல் செற்றம் கொண்டு ஒருவன் இன்னாதவற்றைச் செய்த இடத்தும். மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - மீண்டுதாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு. (இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. அவ் இன்னாதவற்றை உட்கொள்ளாது விடுதல் செயற்பாலது என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.