குறள் 309:

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

If man his soul preserve from wrathful fires, He gains with that whate'er his soul desires
அதிகாரம் - 31 - வெகுளாமை
மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.
பரிமேலழகர் விளக்கம்
உள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின் - தவஞ்செய்யும் அவன், தன் மனத்தால் வெகுளியை ஒருகாலும் நினையானாயின், உள்ளிய எல்லாம் உடன் எய்தும் - தான் கருதிய பேறு எல்லாம் ஒருங்கே பெறும். ( 'உள்ளத்தால்' என வேண்டாது கூறிய அதனான், 'அருளுடை உள்ளம்' என்பது முடிந்தது. உள்ளாமையாவது அவ்வருளாகிய பகையை வளர்த்து, அதனான் முற்றக் கடிதல். இம்மை மறுமை வீடு என்பன வேறுவேறு திறத்தனவாயினும், அவை எல்லாம் இவ்வொன்றானே எய்தும் என்பார், 'உள்ளிய எல்லாம் உடன் எய்தும்' என்றார். இதனான் வெகுளாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.