குறள் 301:
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கா
Where thou hast power thy angry will to work, thy wrath restrain; Where power is none, what matter if thou check or give it rein
அதிகாரம் - 31 - வெகுளாமை
மு.வரதராசன் விளக்கம்
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன?காக்காவிட்டால் என்ன?
பரிமேலழகர் விளக்கம்
சினம் செல் இடத்துக் காப்பான் காப்பான்-தன் சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளால் தடுப்பானாவான், அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் - ஏனைப் பலியாத இடத்து அதனைத் தடுத்தால் என்? தடாது ஒழிந்தால் என்? ('செல்லிடம்', 'அல்லிடம்' என்றது, தவத்தால் தன்னின் மெலியாரையும் வலியாரையும். வலியார்மேல் காவா வழியும், அதனான் அவர்க்கு வருவதோர் தீங்கு இன்மையின், காத்தவழியும் அறன் இல்லை என்பார், 'காக்கின் என் காவாக்கால் என்' என்றார். இதனான் வெகுளாமைக்கு இடம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?