குறள் 299:

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

Every lamp is not a lamp in wise men's sight; That's the lamp with truth's pure radiance bright
அதிகாரம் - 30 - வாய்மை
மு.வரதராசன் விளக்கம்
(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.
பரிமேலழகர் விளக்கம்
எல்லா விளக்கும் விளக்கு அல்ல - புறத்து இருள் கடியும் உலகத்தார் விளக்குகள் எல்லாம் விளக்கு ஆகா, சான்றோர்க்கு விளக்கு பொய்யா விளக்கே - துறவான் அமைந்தார்க்கு விளக்காவது மனத்து இருள் கடியும் பொய்யாமை ஆகிய விளக்கே. (உலகத்தார் விளக்காவன: ஞாயிறு,திங்கள், தீ என்பன. இவற்றிற்குப் போகாத இருள் போகலின் 'பொய்யா விளக்கே விளக்கு' என்றார். அவ்விருளாவது அறியாமை. 'பொய்யாத விளக்கு' என்பது குறைந்து நின்றது. பொய் கூறாமையாகிய விளக்கு என்றவாறு. இனி இதற்குக் 'கல்வி முதலியவற்றான் வரும் விளக்கம் அல்ல: அமைந்தார்க்கு விளக்கமாவது பொய்யாமையான் வரும் விளக்கமே', என்று உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.