குறள் 290:
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.
The fraudful forfeit life and being here below; Who fraud eschew the bliss of heavenly beings know
அதிகாரம் - 29 - கள்ளாமை
மு.வரதராசன் விளக்கம்
களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.
பரிமேலழகர் விளக்கம்
கள்வார்க்கு உயிர் நிலை தள்ளும் - களவினைப் பயில்வார்க்குத் தம்மின் வேறல்லாத உடம்பும் தவறும், கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது - அது செய்யாதார்க்கு நெடுஞ்சேணது ஆகிய புத்தேள் உலகும் தவறாது. (உயிர் நிற்றற்கு இடனாகலின், உயிர்நிலை எனப்பட்டது. சிறப்பு உம்மைகள் இரண்டும் விகாரத்தால் தொக்கன. இம்மையினும் அரசனால் ஒறுக்கப்படுதலின், 'உயிர் நிலையும் தள்ளும்' என்றும், மறுமையினும் தேவராதல் கூடுதலின் 'புத்தேள் உலகும் தள்ளாது' என்றும் கூறினார். 'மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து' (குறள்.566) என்புழியும் 'தள்ளுதல்' இப்பொருட்டாதல் அறிக. இதற்குப் பிறவாறு உரைப்பாரும் உளர். இதனான் இருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.