குறள் 288:
அளவறந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
As virtue dwells in heart that 'measured wisdom' gains; Deceit in hearts of fraudful men established reigns
அதிகாரம் - 29 - கள்ளாமை
மு.வரதராசன் விளக்கம்
அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.
பரிமேலழகர் விளக்கம்
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் - அவ்வளத்தலையே பயின்றவர் நெஞ்சத்து அறம் நிலை பெற்றாற்போல நிலைபெறும், களவு அறிந்தார் நெஞ்சில் கரவு - களவையே பயின்றவர் நெஞ்சத்து வஞ்சனை. (உயிர் முதலியவற்றை அளந்தறிந்தார்க்குத் துறவறம் சலியாது நிற்கும் என்பது இவ்வுவமையால் பெற்றாம். களவோடு மாறின்றி நிற்பது இதனால் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும்.