குறள் 282:
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
'Tis sin if in the mind man but thought conceive; 'By fraud I will my neighbour of his wealth bereave.'
அதிகாரம் - 29 - கள்ளாமை
மு.வரதராசன் விளக்கம்
குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்.
பரிமேலழகர் விளக்கம்
உள்ளத்தால் உள்ளலும் தீதே - குற்றங்களைத் தம் நெஞ்சால் கருதுதலும் துறந்தார்க்குப் பாவம், பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் - ஆதலால், பிறனொருவன் பொருளை அவன் அறியா வகையால் வஞ்சித்துக் கொள்வோம் என்று கருதற்க. ('உள்ளத்தால்' என வேண்டாது கூறினார், அவர் உள்ளம் ஏனையோர் உள்ளம் போலாது சிறப்புடைத்து என்பது முடித்தற்கு. உள்ளலும் என்பது இழிவு சிறப்பு உம்மை. 'அல்' விகுதி வியங்கோள் 'எதிர்மறைக்கண்' வந்தது. இவை இரண்டு பாட்டானும் இந்நடைக்குக் களவாவது இஃது என்பதூஉம் அது கடியப்படுவது என்பதூஉம் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.