குறள் 274:
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
'Tis as a fowler, silly birds to snare, in thicket lurks When, clad in stern ascetic garb, one secret evil works
அதிகாரம் - 28 - கூடாவொழுக்கம்
மு.வரதராசன் விளக்கம்
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை.
பரிமேலழகர் விளக்கம்
தவம் மறைந்து அல்லவை செய்தல் - அவ் வலிஇல் நிலைமையான் தவவேடத்தின்கண்ணே மறைந்து நின்று தவமல்லவற்றைச் செய்தல், வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்தற்று - வேட்டுவன் புதலின் கண்ணே மறைந்து நின்று புட்களைப் பிணித்தாற்போலும்.( 'தவம்' ஆகுபெயர்.தவம் அல்லவற்றைச் செய்தலாவது, பிறர்க்கு உரிய மகளிரைத் தன்வயத்தாக்குதல், இதுவும் இத்தொழில் உவமையான் அறிக.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்.