குறள் 266:
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
Who works of 'penance' do, their end attain, Others in passion's net enshared, toil but in vain
அதிகாரம் - 27 - தவம்
மு.வரதராசன் விளக்கம்
தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈடுபடுபவர்கள்.
பரிமேலழகர் விளக்கம்
தம் கருமம் செய்வார் தவம் செய்வார் - தம் கருமம் செய்வாராவார் துறந்து தவத்தைச் செய்வார், மற்று அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் - ஒழிந்த பொருள் இன்பங்களைச் செய்வார், அவற்றின்கண் ஆசையாகிய வலையுள்பட்டுத் தமக்குக் கேடு செய்வார். (அநித்தமாய் மூவகைத் துன்பத்ததாய் உயிரின் வேறாய உடற்கு வருத்தம் வரும் என்று ஒழியாது தவத்தினைச் செய்ய, பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களான் அநாதியாகத் துன்பம் எய்தி வருகின்ற உயிர் ஞானம் பிறந்து வீடு பெறும் ஆகலின், தவம் செய்வாரைத் 'தம் கருமம் செய்வார்' என்றும், கணத்துள் அழிவதான சிற்றின்பத்தின் பொருட்டுப் பலபிறவியும் துன்புறத்தக்க பாவஞ்செய்து கோடலின், அல்லாதாரை 'அவம் செய்வார்' என்றும் கூறினார். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர்.