குறள் 252:
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
No use of wealth have they who guard not their estate; No use of grace have they with flesh who hunger sate
அதிகாரம் - 26 - புலான்மறுத்தல்
மு.வரதராசன் விளக்கம்
பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை.
பரிமேலழகர் விளக்கம்
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை - பொருளால் பயன் கோடல் அதனைப் பாதுகாவாதார்க்கு இல்லை, ஆங்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்களுக்கு இல்லை - அது போல அருளால் பயன் கோடல் ஊன் தின்பவர்களுக்கு இல்லை. (பொருட்பயன் இழத்தற்குக் காரணம் காவாமை போல, அருட்பயன் இழத்தற்கு ஊன் தின்னல் காரணம் என்பதாயிற்று. ஊன் தின்றாராயினும் உயிர்கட்கு ஒரு தீங்கும் நினையாதார்க்கு அருள் ஆள்தற்கு இழுக்கு இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவை இரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.