குறள் 250:
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.
When weaker men you front with threat'ning brow, Think how you felt in presence of some stronger foe
அதிகாரம் - 25 - அருளுடைமை
மு.வரதராசன் விளக்கம்
(அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது,தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.
பரிமேலழகர் விளக்கம்
வலியார் முன் தன்னை நினைக்க - தன்னின் வலியார் தன்னை நலிய வரும்பொழுது அவர்முன் தான் அஞ்சிநிற்கும் நிலையினை நினைக்க, தான் தன்னின்மெலியார்மேல் செல்லுமிடத்து - அருளில்லாதவன் தன்னின் எளியார்மேல் தான் நலியச் செல்லும் பொழுது. ('மெலியார்' எனச் சிறப்புடைய உயர்திணைமேல் கூறினாராயினும், ஏனைய அஃறிணையும் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, இவ்வுயிர்க்கும் அவ்வாறே அச்சம் ஆம் என்று அறிந்து, அதன்மேல் அருள் உடையன் ஆம் என்பது கருத்து. இதனால் அருள் பிறத்தற்கு உபாயம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க.