குறள் 242:
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.
The law of 'grace' fulfil, by methods good due trial made, Though many systems you explore, this is your only aid
அதிகாரம் - 25 - அருளுடைமை
மு.வரதராசன் விளக்கம்
நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
நல் ஆற்றான் நாடிஅருள் ஆள்க - அளவைகளானும் பொருந்து மாற்றானும் நன்றான நெறியிலே நின்று, நமக்குத் துணையாம் அறம் யாது? என்று ஆராய்ந்து, அருளுடையராக, பல் ஆற்றான் தேரினும் துணை அஃதே - ஒன்றையொன்று ஒவ்வாத சமய நெறிகள் எல்லாவற்றானும் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே, பிறிது இல்லை. (அளவைகளாவன: பொறிகளான் காணும் காட்சியும், குறிகளான் உய்த்துணரும் அனுமானமும், கருத்தா மொழி ஆகிய ஆகமமும் என மூன்று. ஒப்புப்பற்றி உணரும் உவமையும், இங்ஙனம் அன்றாயின் இது கூடாது என்று உணரும் அருத்தாபத்தியும், உண்மைக்கு மாறாயஇன்மையும் என இவற்றைக் கூட்டி, ஆறு என்பாரும் உளர். இவையும் ஒரு ஆற்றான் அவற்றுள்ளே அடங்குதலின் மூன்று என்றலே கருத்து. பொருந்தும் ஆறாவது, 'இது கூடும் , இது கூடாது' எனத் தன் கண்ணே தோன்றுவது. இதனை வடநூலார் 'உத்தி' என்ப. 'ஆற்றான்' என்பது வேற்றுமை மயக்கம். ஒன்றை ஒன்று ஒவ்வாமையாவது மத வேறுபாட்டான் அளவைகளும் பொருள்களும் தம்முள் மாறுகோடல்; அன்னவாயினும், அருள் துணை என்றற்கண் ஒக்கும் என்பதாம். உயிரை விட்டு நீங்காது இருமையினும் உதவலின், 'துணை' என்றார். இவை இரண்டு பாட்டானும் அருளினது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்.