குறள் 238:

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.

Fame is virtue's child, they say; if, then, You childless live, you live the scorn of men
அதிகாரம் - 24 - புகழ்
மு.வரதராசன் விளக்கம்
தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழி யென்று வையம் கூறும்.
பரிமேலழகர் விளக்கம்
இசை என்னும் எச்சம் பெறாவிடின் - புகழ் என்னும் எச்சம் பெறலாயிருக்க, அது பெறாது ஒழிவாராயின், வையத்தார்க்கு எல்லாம் வசை என்ப - வையகத்தோர்க்கு எல்லாம் அது தானே வசை என்ற சொல்லுவர் நல்லோர். ( 'எச்சம்' என்றார், செய்தவர் இறந்து போகத் தான் இறவாது 'நிற்றலின்' இகழப்படுதற்குப் பிறிதொரு குற்றம் வேண்டா என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா விளக்கம்
புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.